Our Feeds


Friday, May 26, 2023

ShortNews Admin

7 மில்லியன் மக்களுக்கு உதவும் நோக்கில் 123.5 மில்லியன் டொலர் நிதி சேகரிப்பு - இலங்கை தொடர்பான ஐ. நா. வின் வருடாந்த அறிக்கை



(நா.தனுஜா)


இலங்கை கடந்த ஆண்டு மிகமோசமான சமூக, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அதன் விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த 2.9 மில்லியன் மக்களுக்கு அவசியமான உடனடி மனிதாபிமான உதவிகளைத் தாம் வழங்கியதாகவும் மொத்தமாக 7 மில்லியன் மக்களுக்கு உதவும் நோக்கில் 123.5 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சமூக, பொருளாதார நிலைவரம் மற்றும் அதில் நிலவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவுதற்கும் ஐக்கிய நாடுகள் சபையாலும் அதன் கிளை அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பவற்றை உள்ளடக்கி இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கை மக்களைப் பொறுத்தமட்டில், குறிப்பாக பின்தங்கிய சமூகப்பிரிவினருக்குக் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகவும் கடினமான காலப்பகுதியாகவே அமைந்திருந்தது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்விநியோகத்தடை, உயர் பணவீக்கம், வாழ்க்கைச்செலவு உயர்வு, அரசியல் ரீதியில் ஏற்பட்ட மாறுதல்கள் என்பன மக்களின் அன்றாட வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியதுடன் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலைக்கு அவர்களைத் தள்ளியது. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பொதுமக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை தொடர்பில் எமது தீவிர கரிசனை வெளிப்படுத்தும் அதேவேளை, அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுவோருக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதில் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கைக்கு அவசியமான குறிப்பிடத்தக்களவிலான மனிதாபிமான உதவிகளை வழங்கியிருந்ததுடன் விரிவான சமூக-பொருளாதார மீட்சிக்கும் பங்களிப்புச்செய்திருந்தது. அதன்படி சுமார் 2.9 மில்லியன் மக்களுக்கு, அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதமானோருக்கு அவசியமான உடனடிய உதவிகள் ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்புக்களால் வழங்கப்பட்டன.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையானது கடந்த ஆண்டு இலங்கை தொடர்பில் அதன் ஐந்து வருடகால நிலைபேறான அபிவிருத்திச்செயற்திட்டத்தை ஆரம்பித்துவைத்தது. இருப்பினும்கூட மிகவும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் வெகுவாகப் பாதிப்படையக்கூடியவகையிலான நெருக்கடிநிலைக்கும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் பல்வேறு சவால்களுக்கும் இலங்கை தொடர்ந்து முகங்கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் மறுபுறம் இலங்கைக்கும் சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் குறிப்பிட்டுக்கூறத்தக்க முன்னேற்றம் தென்பட்டது.

அதேவேளை கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 7 மில்லியன் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டதுடன், இதுவரை அவர்களில் 2.9 மில்லியன் பேருக்கு அவசியமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி அவர்களுக்கு உதவுவதற்கென சர்வதேச நாடுகள், இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளிகள், நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து மொத்தமாக 123.5 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »