Our Feeds


Saturday, May 27, 2023

ShortNews Admin

காபாவை நோக்கியபடி 5 வேளை தொழுகையை நிறைவேற்ற எனக்கு பாக்கியம் கிடைத்தது. - சவுதி சென்று உம்ரா செய்த அனுபவத்தை பகிர்ந்தார் முன்னாள் நடிகை சஞ்சனா




கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சஞ்சனா கல்ராணி தனது கணவருடன் ஹிஜாப் அணிந்து சவூதி அரேபியாவுக்கு சென்று உம்ரா செய்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கும் நிலையில் சிலர் இதை கேரளா ஸ்டோரியுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்.


கர்நாடகா தலைநகர் பெங்களூருவை சேர்ந்தவர் சஞ்சனா கல்ராணி. கன்னட சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தவர். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி இவரது சகோதரி. இந்த நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டார்.


அதன் பின்னர் அஜீஸ் பாஷா என்பவரை சஞ்சனா கல்ராணி திருமணம் செய்துகொண்டார். பெங்களூருவை சேர்ந்த மருத்துவரான அஜீஸ் பாஷா வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். அஜீஸ் பாஷா - சஞ்சனா கல்ராணி தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி தனது கணவர் அஜீஸ் பாஷா மற்றும் குழந்தையுடன் சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு சென்று உம்ரா செய்து இருக்கிறார்.


அத்துடன் மெக்காவுக்கு உம்ரா செய்ய சென்ற அனுபவத்தையும் சஞ்சனா கல்ராணி உணர்ச்சிப்பூர்வமாக பேசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது, "எனது குடும்பத்துடன் உம்ரா செய்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஹரம் ஷரீப் எனப்படும் கஃபா அருகில் அமைந்து இருக்கும் மிகவும் உயரமான கட்டிடத்தில் தங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கஃபாவை எதிர்நோக்கியபடி 5 வேளை தொழுகையை நிறைவேற்ற எனக்கு பாக்கியம் கிடைத்தது. இதனை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. மக்காவில் 4 பகல்கள் 3 இரவுகளை செலவழித்தோம். அங்கு கிடைத்த அனுபவங்கள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். எனக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதும் துயரத்தில் உள்ளவர்கள், சங்கடத்திலும் மன வேதனையில் நாட்களை கழிப்பவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சஞ்சனா கல்ராணியின் படங்களை பார்த்து கேரளா ஸ்டோரி படத்துடன் அவரை ஒப்பிட்டு சிலர் கருத்திட்டனர்.


இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த சஞ்சனா கல்ராணி, "நான் இந்து குடும்பத்தில் பிறந்தேன். கிறிஸ்துவ பள்ளியில் பயின்றேன். 12 ஆண்டுகள் எனது வாழ்க்கை அங்கேயே கழிந்தது. அதன் பின்னர் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டேன். பிறகு இஸ்லாமியரை நான் திருமணம் செய்து அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக எந்த வெறுப்புணர்வையும் ஏற்படுத்த நான் விரும்பவில்லை.


 அனைத்து மதங்களையும் நான் சமமாக மதிக்கிறேன். யாருக்கும் என்னை பற்றி எடைபோட உரிமை இல்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நான் மிகுந்த மதிப்பளிக்கிறேன். இந்த ஆன்மீக வாழ்வில் நான் அனைத்தையும் நேர்மறையாக உணர்கிறேன். இதை அனைவருக்கும் பரப்ப விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »