இந்தியா, மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், பழங்குடி ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் 10 மலை மாவட்டங்களில் இந்தப் பேரணி நடைபெற்றது. அப்போது பழங்குடிகளுக்கும் - மேதி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் காவல் துறை குவிக்கப்பட்டது. மேலும், இணையச் சேவையை 5 நாட்களுக்கு முடக்க மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 114 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ள நிலையில். உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரிலும் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது.
சுமார் பத்தாயிரம் இராணுவத்தினர் மணிப்பூர் முழுதும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கலவரம் காரணமாக கடந்த புதன்கிழமையில் இருந்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டால் மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் பயணிக்கின்றன. நகரின் முக்கிய பகுதிகளில் இராணுவம், மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
“கடந்த 12 மணி நேரங்களில் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கலவரக்காரர்கள் கட்டிடங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தினர். எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது,” என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.