அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடியாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உட்பட 500 பேருக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
இதில் அமெரிக்கா கூடுதலான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா சமீபத்தில் மறுத்தது. இந்த நிலையில்தான் ரஷ்யாவின் இந்தத் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவினுள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச் ரஷ்யாவில் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கைது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை அமெரிக்க தூதரகம் அணுகியது.
ஆனால், அமெரிக்காவின் இந்த கோரிக்கையை மறுப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு தற்போது தெரிவித்துள்ளது.