ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வளாகத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய 40 மாணவர்கள் அந்த ஹோட்டலின் உணவை உட்கொண்ட பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த ஹோட்டலை ஹிக்கடுவைப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர். இதன்போது ஹோட்டலின் தண்ணீர் தொட்டி மாசுபட்டு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் களுத்துறை சுகாதார பரிசோதகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த விடுதிக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்குப்பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், ஹிக்கடுவை நகரில் உள்ள பல முக்கிய ஹோட்டல்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது உணவு மற்றும் குளிர்பானங்களை முறைகேடாக சேமித்து வைத்திருந்த 4 ஹோட்டல்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.