தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த மூன்று இளைஞர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த நிலையில் அவர்கள் சிறு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, இவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, கையடக்கத் தொலைபேசியில் சில காட்சிகளை எடுக்க முற்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.