Our Feeds


Wednesday, May 17, 2023

ShortNews Admin

நாட்டில் 379 கிருஸ்தவ மத அமைப்புக்கள் - கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் வேண்டும் - ஞானசார தேரர் கோரிக்கை



(இராஜதுரை ஹஷான்)

கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படை வாதத்தை போன்று கிறிஸ்தவ அடிப்படைவாதத்தை உதாசீனப்படுத்தினால் பாரிய விளைவுகள் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ராஜகிரிய பகுதியில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜெரொம் பெர்னாண்டோ என்ற மதபோதகர் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பு சமூகத்தின் மத்தியில் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. ஒரு தரப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இலங்கையில் கிருஸ்தவர்கள் 3 சதவீதமளவில் உள்ளார்கள். 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணிப்பின்படி நாட்டில் 379 கிருஸ்தவ மத அமைப்புக்கள் தொழிற்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பூகோள பயங்கரவாதத்தின் புதிய முகம் மத பிரசாரங்கள் ஊடாக தற்போது வெளிப்படுகிறது.

நாட்டில் இஸ்லாம், கிருஸ்தவ மதமாற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மதமாற்றத்துக்கு உள்ளான தரப்பினர் தான் பௌத்த கோட்பாடுகளுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

நாட்டில் வாழும் சுதேச முஸ்லிம், இந்து மற்றும் கிருஸ்தவர்கள் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

இலங்கை ஒரு பௌத்த நாடு என பெயரளவில் மாத்திரமே குறிப்பிடப்படுகிறது.ஆட்சியாளர்களும்,அரசியல்வாதிகளும் பௌத்த மத பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தவில்லை.

பௌத்த மத பாதுகாப்பு தொடர்பில் பிரத்தியேக சட்டத்தை உருவாக்க 2004 ஆம் ஆண்டு முதல் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சட்டமாதிபர் திணைக்களம் சிறிய வத்திகான் போன்று செயற்படுவதால் அந்த முயற்சி முழுமையாக தடைப்பட்டுள்ளது.

பௌத்த மதத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில்  ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்தார்.

இந்த ஆணைக்குழு உண்மை தன்மையை பகிரங்கப்படுத்தியது. இருப்பினும் அறிக்கையின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்துக்கள்,பௌத்தர்கள் ஏதாவதொரு வழிமுறையில் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது.ஆகவே கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.உண்மையை குறிப்பிட்டதால் நாங்கள் இனவாதியாகவும், மதவாதியாகவும் சித்தரிக்கப்பட்டோம்.இறுதியில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னர் பல விடயங்களை நாட்டு மக்கள் விளங்கிக் கொண்டார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயற்படாத காரணத்தால் விளைவு பாரதூரமாக அமைந்தது.

ஆகவே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போன்று கிருஸ்தவ அடிப்படைவாதத்தையும் உதாசீனப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »