Our Feeds


Wednesday, May 24, 2023

ShortNews Admin

சிறுவர்களின் போசாக்கின்மை 30 வீதத்திலிருந்து 60 வீதம் வரை தோட்டங்களில் உயர்ந்துள்ளது - இதுவும் இ.தெ.க வின் சாதனை தான் - வேலுகுமார் காட்டம்!



"அன்று சமூர்த்தியில் எமது மக்கள் ஓரம் கட்டப்பட்ட போது மெளனமாக இருந்தார்கள். இன்று புதிய நிவாரண திட்டத்தில் எமது மக்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது புரளி என்கிறார்கள்." என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரித்திருத்த விவாதத்தத்தின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கருத்து வெளியிட்டார்.


எமது மக்கள் ஐந்தாறு பரம்பரையாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். இருநூறு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போதும் ஆரம்பநிலை பிரச்சினையையே பேச வேண்டியுள்ளது. எமது மக்கள் தொடர்ச்சியாக நிவாரண கொடுப்பனவுகளில் ஓரம்கட்டப்பட்டுள்ளார்கள். அன்று சமூர்த்தியில் எமது மக்கள் ஓரம்கட்டப்பட்ட போது மெளனமாக இருந்தார்கள். இன்று புதிய நிவாரண திட்டத்தில் எமது மக்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது புரளி என்கிறார்கள்.

ஜனாதிபதி, நீர்வழங்கல் அமைச்சர் சாதனை படைத்திருக்கிறார் என கூறுகின்றார். கடந்த நான்கு பரம்பரையாக இப்பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தி அவர் சார்ந்த கட்சி, தொழிற்சங்கம் படைத்த சாதனைகளை நாம் நினைவு கூறவேண்டியுள்ளது.

இன்று மலையகத்தில் வறுமை நிலை 60 வீதத்தினை தாண்டிவிட்டது. ஏறக்குறைய 640,000 க்கு மேற்பட்ட நபர்கள் வறுமை நிலையில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். நான்கு பரம்பரையாக இச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தி படைத்த சாதனையில் ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல. 200,000 க்கு அதிகமான குடும்பங்கள் லயன் அறையில் முடக்கப்பட்டுள்ளார். அவர்களை அதிலிருந்து வெளியே வர விடாமல் சாதனை படைத்துள்ளார். குழந்தைகள், சிறுவர்களின் போசாக்கின்மை 30 வீதத்திலிருந்து இன்று 60 வீதம் வரை தோட்டங்களில் உயர்ந்துள்ளது. இதுவும் இவர்களின் இன்னொரு சாதனையே.

அன்று வறுமை நிலையில் உள்ளவர்களுக்கான நிவாரண திட்டமான சமூர்த்தி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி யார் இந்த சபையில் இருந்தது? எமது மக்கள் ஓரம்கட்டப்பட்ட போது மெளனமாக இருந்தார்கள்.

அரசாங்கத்தை திருப்த்திபடுத்தினார்கள். இன்று வறுமையின் உச்ச நிலைக்கு மலையக தோட்ட மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உலக வங்கியின் உதவியுடன் சமூக பாதுகாப்பு நிவாரண திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன் போது எமது மக்கள் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும் என்றும், கடந்த கால பாராபட்சங்கள் இடம்பெறக்கூடாது என்றும் உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதியிடம் நாம் எடுத்து கூறினோம்.

அதன் படி, கடந்த காலத்தைபோல் ஒரு லயன் அரை என்பது ஒரு குடும்பம் அல்ல. அதில் பல குடும்பங்கள் வாழ்கின்றது என்ற விளக்கத்தை விளக்கி கூறினோம். அதன் மூலம் தகைமையுடைய அனைவரையும் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இப்போது நீர்வழங்கல் அமைச்சர், நிவாரண திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள எமது மக்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டுவிட்டனர், எதிர்க்கட்சியினர் புரளியை கிளப்புகின்றனர் என அறிக்கை விடுகின்றார்.

நுவரெலியாவில் உள்ளவர்கள் மட்டுமா தோட்ட மக்கள்? கண்டி, கேகாலை, இரத்தினப்புரி, காலி, மாத்தளை மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள தோட்டங்களில் இருக்கும் மக்கள் தோட்ட மக்கள் இல்லையா? அவர்களுக்கு நிவாரணம் தேவையில்லையா? நாம் அனைத்து மலையக தோட்ட மக்களையும் உள்வாங்குவதற்கு செயற்படுகின்றோம்.

அரசாங்கத்தை சந்தோசப்படுத்துவதற்காக, அரச சார்பாக பேசுவதற்காக, வீணாக, மக்களுக்கு கிடைப்பதை குழப்பாதீர்கள். இவற்றை கைவிட்டு நான்கு பரம்பரையாக படைத்துள்ள சாதனைகளை முடிப்பதற்கு ஒத்துழையுங்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »