கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் தெரிவிக்கையில் ,
கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம்.
இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த வாரத்தில் கோவிட் 19 பெருந்தொற்றால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது.
தற்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிட் பெருந்தொற்றால் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தொற்றுக்குப் பிறகான பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸ் இங்கே இன்னமும் இருக்கிறது. தொடர்ந்து அது மக்களை கொல்கிறது. இன்னமும் அது ஒரு சவாலாகவே உள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் புதிய வகை வைரஸ்களால் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளன.
தற்போதைய அறிவிப்பின் முக்கிய நோக்கம் இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதைத் தெரிவிக்கவே. மிகுந்த எச்சரிக்கையுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.