(எம்.மனோசித்ரா)
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கின்றோம். கட்சியிலிருந்து செல்பவர்கள் தாராளமாக செல்லலாம். நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இன்று சனிக்கிழமை (8) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணையவுள்ளதாக கூறப்படுகின்றமை உண்மைக்கு புறம்பான தகவல்களாகும்.
எம்மில் உள்ள 70 வயதைத் தாண்டிய சிலருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சுப் பதவியை வகிக்கவும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவும் ஆசையுண்டு. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
எனவே, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இவ்வாறான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை வலியுறுத்துகின்றோம். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று போராடிய சிலரில் நானும் ஒருவன். எனவே, இந்த கோரிக்கையை அவரிடம் முன்வைக்கும் உரிமை எனக்குண்டு.
தற்போது மக்களுக்கு இலவசமாக 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இலவசமாக அரிசியை பெற்று வாழும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த திட்டங்களின் நோக்கங்களை மக்கள் நன்கு அறிவார்கள். கட்சியிலிருந்து செல்பவர்கள் தாராளமாக செல்லலாம். நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்றார்.