Our Feeds


Tuesday, April 4, 2023

ShortNews Admin

தொல்பொருள் திணைக்களம் தான் இனவாதத்தை ஏற்படுத்துகிறது - சாணக்கியன் MP பாராளுமன்றில் காட்டம்.



தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (04) கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.


இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்பிற்கு வந்தபோதும் குசலான மலையில் வைத்து உங்களை தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளை செய்ய முடிகின்றது.


இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த நாட்டுக்குள்ளே மீண்டும் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றீர்கள்.


வெடுக்குநாரி மலையிலே ஒரு குழப்பம், குருந்தூர் மலையிலே ஒரு குழப்பம், குசலான மலையிலே ஒரு குழப்பம், அரிசி மலையிலே ஒரு குழப்பம், தற்போது திருகோணமலை புல்மோட்டையிலே ஒரு குழப்பம்.


இந்த நாட்டினுல் ஐ.எம்.எப் ஒப்பந்தம் வந்தாலும் சரி உங்களைப் போன்ற இனவாதிகள், உங்களைப்போன்ற இனவாத அமைச்சர்கள், இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு, வடக்கு கிழக்கில் எங்களுடைய காணிகளை சுவீகரிக்கின்றீர்கள்.


தொல்பொருள் செயலணி என்பது தொல்பொருளை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம்.


ஆனால் தொல்பொருள் என்ற போர்வையில் ஏன் பௌத்த பிக்குகள் வர வேண்டும். ஏன் அதிகாரிகள் இல்லையா?


சோறுக்கும் தண்ணிக்கும் வழியில்லாமல் இருக்கும் போதும் கூட தொல்பொருள் திணைக்களத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடருமாக இருந்தால், ஐ.எம்.எப் மட்டும் இல்லை எவறாலும் இந்த நாட்டை காப்பாத்த முடியாது.


இந்த தொல்பொருள் செயலணியும், தொல்பொருள் திணைக்களமும், நீங்களும், இந்த அரசாங்கமும் இனவாதத்திற்காகவே இதனை பயன்படுத்துகின்றீர்கள்.


இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கினை நாங்கள் முடக்குவோம். உங்களைப்போன்ற இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதவாறு முடக்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »