Our Feeds


Tuesday, April 4, 2023

ShortNews Admin

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு - ஜனாதிபதி உறுதி



(எம்.மனோசித்ரா)


வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெறியாத நபர்களால் கடந்த மாதம் தகர்தெறியப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாராளுமன்றத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று அது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வவுனியா - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சனை தொடர்பில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.

இப்பிரச்சினைக்கு புத்தாண்டின் பின்னர் தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அத்தோடு இவ்விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்மையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »