சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல் 225 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (08) காலை தரையிறக்கப்பட்டது.
நேற்று (07) மாலை 06.25 மணிக்கு குறித்த விமானம் துபாய் நோக்கி பயணிக்கவிருந்தது. எவ்வாறாயினும், குறித்த விமானம் இன்று (08) காலை 09.30 மணிக்கே பயணத்தை ஆரம்பித்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 1 மணித்தியாலம் 10 நிமிடத்தின் பின்னர், அதாவது காலை 10.40 மணிக்கு குறித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானிக்கு முன்பாகவுள்ள முன்பக்கக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமையாலேயே விமானம் இலங்கைக்கு திரும்பி தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் இந்தியாவை அண்மித்து பயணித்துக்கொண்டிருந்த வேளையில், கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளமை அவதானித்த, விமானி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, விமானி மேலும் செல்லாமல் தனது விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்பியுள்ளதுடன், விமானத்தில் 189 பயணிகளும் 15 ஊழியர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள்கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாற்று விமானத்தில் இன்று (08) மாலை டுபாய்க்கு புறப்பட உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
(டி.கே.ஜி கபில)