Our Feeds


Monday, April 3, 2023

ShortNews Admin

சூனியம் ? எடுப்பதாக கூறி மண்ணை உருட்டி வைத்து முழு ஊரையும் ஏமாற்றிய பூசாரிகள் தப்பியோட்டம் - நானுஓயாவில் சர்சை!





ஆ.ரமேஸ்.


நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத்தித்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக அத்தோட்ட மக்களை ஏமாற்றி ஆலய வளாக பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சூனியத்தை தான் எடுப்பதாக கூறி தலவாக்கலையிலிருந்து  வருகை தந்த இந்தியா தஞ்சாவூர் பூசாரியின் செயல் தோட்ட மக்களிடத்தில் கலோபரத்தை ஏற்படுத்தியது.


இந்த சம்பவத்தில் பூசாரிகள்    இருவரை தோட்ட மக்கள் விரட்டியடித்ததால் அவர்கள் உயிர்தப்பி ஓடிய சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (31.03.2023) மாலை இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

இந்தியா தஞ்ஞாவூரை சேர்ந்த நபர் ஒருவர் தலவாக்கலை பகுதியில் தங்கியிருந்து சாமி பார்ப்பது, சூனியம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக நானு ஓயா கிளாசோ மேல் பிரிவு தோட்டத்திற்கு வருகை தந்து அங்கு வெவ்வேறான மூன்று வீடுகளில் சூனியம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

முதன் முறையாக சாமியாடி வீட்டில் சூனியம் இருப்பதாக கூறி ஓரு தொகை பணத்தை பெற்று அங்கு பூமியில் மறைத்து வைத்திருத்த சூனியத்தை எடுத்ததாக வீட்டார் ஊராரிடம் தெரிவித்துள்ளனர்.

பின் இதை நம்பிய மேலும் இரு வீட்டார் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு சாமியழைத்து கேள்வி கேட்டபோது அவ்வீடுகளிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு தொகை பணத்தை பெற்று சூனியம் எடுத்ததாக இவர் ஊர் மக்களிடம் நம்பிக்கையை வளர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் எங்கள் வீட்டில் சூனியம் எடுத்த பூசாரி தோட்டத்தில் உள்ள அம்மன் ஆலயத்தில் ஆறு இடங்களில் சூனியம் வைக்கப்பட்டு தோட்ட மக்களை ஆலயத்திற்கு வரவிடாமல் செய்துள்ளதாகவும் அந்த சூனியத்தை ஊர் மக்கள் மத்தியில் நான் எடுக்கிறேன் என தெரிவித்ததாகவும் சூனியம் எடுக்க பூசாரியை அழைத்து சென்ற வீட்டார்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கிளாசோ தோட்ட மக்களிடத்தில் அச்சம் தோண்றி மன குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள சூனியத்தை எவ்வாறு எடுப்பது அதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆலோசித்து பின்னர் பூசாரியை அழைத்து ஆலய நிர்வாகம், பொது மக்கள் ஆகியோர் வினவியுள்ளனர்.

இதன்போது ஆலயத்தில் சூனியம் என்பது பொய் இது இந்து மதத்தை கேவலப்படுத்தும் செயல் என கூறிய ஆலய நிர்வாகம், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தை போக்க சூனியம் இருந்தால் எடுக்கட்டும் என கூறியுள்ளது.

இந்த நிலையில் பூசாரியை அழைத்து ஆலயத்தில் புதைக்கப்பட்டுள்ள சூனியத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும் என  வீடுகளுக்கு அழைத்து வந்து சூனியம் எடுத்ததாக சொல்லும் வீட்டார்கள் கேட்டுள்ளனர்.

அப்போது பூசாரி ஒரு சூனியத்தை எடுக்க தலா ஆறாயிரம் ரூபாய் கேட்டு பின் ஐயாயிரம் ரூபாவுக்கு இணங்கி  ஆறு சூனியங்களை எடுக்க  முப்பதாயிரம் ரூபா வேண்டும் எனவும் பூசை பொருட்களை தோட்ட மக்கள்  வாங்கி தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

இதற்கு சம்மதித்த தோட்ட மக்களிடத்தில் தலா ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் தாருங்கள் என காசு வசூலிக்கப்பட்டு இதில் 46 ஆயிரம் ரூபாய் கிடைத்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தோட்ட அம்மன் ஆலயத்தில் சூனியம் எடுக்கும் செயலுக்கு ஒரு ஆலய நிர்வாக தரப்பு சார்ந்த சிலர் எதிர்ப்பும் ஏனையோர் ஆதரவும் தெரிவித்து ஆலயத்தில் சூனியம் எடுக்கும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது 18 பேர் விரதம் இருக்கும்படியும்,  வீடுகளில் மாமிசம்  சமைக்கவோ,சாப்பிடவோ  வேண்டாம் எனவும் வீடுகளை சுத்தமாக வைத்திருங்கள் என்ற பூசாரியின் சொல்லுக்கமைய தோட்ட மக்கள் இணைங்கி அரை நாள் வேலையும் விட்டு அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

போதாத குறைக்கு அருகில் உள்ள தோட்ட மக்களும் வீடியோ படப்பிடிப்பாளர்களும்  வருகை தந்திருந்தனர். சூனியம் எடுக்க பூசாரியும் அவருக்கு துணையானவரும் பகல் இரண்டு மணியளவில் வந்துவிட்டனர்.

ஆலயத்தில் மக்கள் வந்து குவிய மளமளவென துணை பூசாரி சாங்கியத்திற்கான வேலைகளை பார்த்தார். ஊத்துதெடுக்கும் இடங்களில் இருந்து நீரும் கொண்டு வரப்பட்டு செம்புகளில் நிரப்பப்பட்டது.

தலமை பூசாரி தனது ஆடைகளை மாற்றிக் கொண்டு கழுத்தில் மணி இணைக்கப்பட்ட பெரிய உருத்திராட்சை மாலைகளுடன் வந்தமர்ந்து விபூதி பட்டைகளை உடலில் அடித்து கொண்டு பூசையை ஆரம்பித்தார்.

யாகத்திற்கு தீயும் கொழுந்துவிட்டு எறிய சாம்புராணி புகையுடன் வேர்கள், குச்சிகள் என இட்டு புகையும் பரப்பி கூடியிருந்த மக்களின் நெற்றியில் மைகளும் பூசப்பட்டது.

சூனியத்தை எடுக்கும் பூசாரி அருள் எடுத்து ஆஞ்சநேயர் சாமியை வரவழைத்து அங்கும் இங்கும் தாவி முதலில் ஆலயத்தின் முன் வாசலில்  குழியை போடச் சொல்லி அதில் ஊற்று நீரை இடுமாரு சொல்லி ஆங்காரத்துடன் அந்த குழியில் இரு கைகளையும் இட்டு கிண்டி கிளறி ஒரு மண் உருண்டையை எடுத்து தட்டில் வைத்தார்.

அட ஆண்டவனே அம்மனுக்கே சூனியமா! வைத்தவன் நல்லாவே இருக்க மாட்டான் என புலம்பிய மக்கள் அந்த மண் உருண்டைகளில்  என்னதான் இருக்கிறது என பார்க்க ஆவலாக இருந்தனர்.

பின் இரண்டாவது இடத்திற்கு தாவிய பூசாரி அங்கும் குழி தோண்ட சொல்லி தண்ணீர் ஊத்தி பூசை செய்து ஒரு உருண்டை மண்ணை தட்டில் வைத்தார் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு ஊருக்கு ஏன் இந்த சோதணை? சும்மா விட்டிருந்தால் என்னெல்லாம் நடந்திருக்கும் என புலம்பினார்கள்.

அடுத்து தாவிய பூசாரி மூன்றாம் இடத்திலும் குழி தோண்டி பரிகாரங்கள் செய்து மண் உருண்டையை எடுத்து தட்டில் வைக்க பார்வையிட்ட மக்கள் புலம்பல் ஓயவில்லை.

நான்காம் இடத்துக்கு தாவிய பூசாரி அங்கு வைத்திருந்த பூசை தட்டை எடுத்து வீசிவிட்டு பூமியை முகர்ந்து பரிசோதித்து இங்கு பொம்மை மூலம் சூனியம் செய்து புதைத்துள்ளனர் இது ஆபத்தானது என தெரிவித்தார்.

எனவே அம்மனுக்கு வரும் செவ்வாய் கிழமை  தோட்டத்தில் ஒருவர் மடிப்பிச்சை ஏந்தி பெரும் அரிசியில் கூழ் காய்ச்சி படைத்து விட்டு மறுநாள் புதன் கிழமை சூனியத்தை எடுக்க வேண்டும் என அருள் வாக்கு சொல்ல பயம் ஏற்பட்டதால் இன்றே எதையேனும் செய்து சூனியத்தை எடு சாமி என கூச்சலிட்டு குழப்பம் ஏற்பட்டது.

இந்த குழப்பம் பின் இரு தரப்புக்கிடையில் சண்டையாக மாறி கைகலப்பானது அப்போது பொழுது சாய்ந்து மணி ஆறு ஆகியது இந்த குழப்பத்தில் தாக்குதலுக்கு உள்ளான பூசாரி மற்றும் உதவி பூசாரி தப்பித்தோம், பிழைத்தோம் என உயிரை பிடித்து கொண்டு ஓட்டமெடுத்து அவர்கள் வந்த ஆட்டோவில் தப்பிவிட்டனர்.

இதன்போதும் ஆலயத்தில் சண்டை ஓயவில்லை இருளாகிவிட்டது எவர் எங்கிருந்து தாக்குகின்றனர் என தெரியவில்லை. பெண்கள் கூச்சலிட ஓடிய பூசாரியை பிடிக்க ஒருதரப்பு ஓட  நானு ஓயா பொலிசாருக்கும் தகவல் பறந்து அவர்களும் பூசாரிகளை மடக்கி பிடிக்க முயற்ச்சித்தும் முடியவில்லை.

ஆலயத்தில் எடுக்கப்பட்ட சூனிய மண் உருண்டைகள் மூன்று பாதுகாப்பாக ஆலய வாசலில் இருக்க அதை கலைக்க பூசாரி வேண்டுமே என ஒருபுறம் ஆட்கள் கதர செய்வதறியாத நிலை ஏற்பட்டு கலோபரமானது.

என்ன நடந்தாலும் பரவாயில்லை என நிலைமையை பார்வையிட வந்த கிளாசோ கீழ் பிரிவு தோட்ட ஆலய குருக்கள் முன்வந்து, எடுத்து வைத்திருந்த மண் உருண்டைகளை தண்ணீர் விட்டு கழுவ அதில் சூனியம் ஏதும் இருக்கவில்லை வெறும் மண் மாத்திரமே இருந்தது.

இதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்ற நிலையில் பூசாரியை சூனியம் எடுக்க கூட்டி வந்த குடும்பங்கள் மீது பாய்ந்த தோட்ட மக்கள் சாபமிட்டு தத்தமது வீடுகளுக்கு சென்றனர்.

இந்த போலி பூசாரிகள் மீது பொலிஸ் புகார் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களை தேடி கண்டுபிடித்து சட்டத்தின் நிறுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.

ஏமாற்று வேலை செய்யும் பூசாரிகளிடம் இருந்து தோட்ட மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். R

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »