டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த சுமார் 10 இலட்சம் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆண் நுளம்புகளை ஒரே நேரத்தில் சுற்றாடலில் விடுவதற்கு களனி பல்கலைக்கழக மருத்துவப் பிரிவு தயாராகி வருகிறது.
அடுத்த மாதத்தில் இத்திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த 10 இலட்சம் நுளம்புகளை வெளியிடுவதற்கு கம்பஹா பிரதேசத்தின் 300 ஹெக்டேயர் பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா கிடகம்முல்ல பிரதேசத்தில் முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டம் வெற்றியடைந்ததாக களனிப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிலை மருத்துவ விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் மேனகா ஹபுகொட தெரிவித்துள்ளார்.
சுமார் ஆறு மாதங்களாக இந்த பகுதியில் ஒரு இலட்சம் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆண் நுளம்புகள் வெளியிடப்பட்டதுடன், மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் பரவவில்லை என அவதானிப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தொடர சர்வதேச ஆதரவைப் பெற எதிர்பார்க்கிறேன் என்றும் பேராசிரியர் கூறினார்