Our Feeds


Monday, April 10, 2023

ShortNews Admin

பெரும்பான்மையின மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் - சரத் வீரசேகர நம்பிக்கை!



(இராஜதுரை ஹஷான்)


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டமை கவலைக்குரியது.

மே 9 சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு தரப்பினர் குறைந்தபட்ச அதிகாரத்தை கூட பயன்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பகுதியில் சனிக்கிழமை (8) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஒரு தரப்பினர் வழங்கிய தவறான ஆலோசனைகளினால் அரசாங்கம் பலவீனமடைந்தது. 

பொதுஜன பெரமுன அரசியலில் பலவீனமடைந்துவிட்டது என ஒரு தரப்பினர் அரசியல் பிரசாரம் செய்கிறார்கள். பெரும்பான்மையின மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

சிறந்த மறுசீரமைப்புடன் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறோம்.

கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டார்கள். ஆளும் தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் எமது அரசாங்கத்தில் தான் இடம்பெற்றது,

போராட்டத்தை அடக்கி, நாட்டின் சட்டவொழுங்கை பாதுகாக்க பாதுகாப்பு தரப்பினர் குறைந்தபட்ச அதிகாரத்தை கூட பயன்படுத்தவில்லை. தாக்குதல்கள் இடம்பெறும்போது கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மே 9 சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

மே 9 சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »