காத்தான்குடி நகரிலுள்ள பிரபல பெண் பாடசாலைக்கு முன்னால் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்த நபரொருவர் இன்று வியாழக்கிழமை (27) காலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமுதீன் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்ற போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி குறித்த நபரிடம் 'கஞ்சா வேணும்' எனக் கேட்டுள்ளார்.
குறித்த பாடசாலைக்கு முன்னால் வருமாறு அவர் கூறவே, பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சென்ற போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கொண்டு கேரள கஞ்சாவை வாங்கும் நிலையிலேயே கையும் மெய்யுமாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து சிறிய பக்கட்டுகளைக் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.