கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டமைக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுள்ள கனியவள கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னதாக சந்திருந்தார்.
விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில், இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த, கனியவள பொது சேவை சங்கத்தின் இணைப்பாளர் பந்துல சமன்குமார குறித்த விடயத்தை தெரிவித்தார்.
இதேவேளை, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.