வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
எனவே வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியை மேற்கொண்டது.
இந்த பயிற்சியை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இதனை படையெடுப்புக்கான ஒத்திகை எனவும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் விமர்சித்தார்.
இதேபோல் ஜப்பானை குறிவைத்தும் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை செய்து வருகின்றது. இதற்கு ஜப்பான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் எதையும் பொருட்படுத்தாத வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன், ஹபுதிய அணு ஆயுதங்களை கண்டுபிடிக்க வேண்டும்' என அந்த நாட்டின் விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டும் இன்றி ஏவுகணை சோதனைகளை மேலும் அதிகப்படுத்தி அங்கு போர்ப்பதற்றத்தை உருவாக்கி வருகிறார்.
முத்தரப்பு கூட்டுப்போர் பயிற்சி இந்த நிலையில் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் தென்கொரிய கடற்பகுதியில் நேற்று கூட்டு போர்ப்பயிற்சியை ஆரம்பித்தன.
இதில் அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் நிமிட்ஸ்' விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட பல்வேறு போர்க்கப்பல்கள் இடம் பெற்றுள்ளன. 2 நாட்கள் நடைபெறுகிற இந்த பயிற்சியில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு பயிற்சிகள், தகவல் பரிமாற்றம், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு பிறகு நீருக்கடியில் இருந்து வடகொரியா ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்காக இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த முத்தரப்பு போர்ப்பயிற்சி கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த முத்தரப்பு கூட்டுப்போர் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்ப பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று வடகொரியா பலமுறை எச்சரித்த நிலையில் இந்த கூட்டுப்போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படுவது வடகொரியாவை மேலும் கோபமடைய செய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.