முட்டை விலை 35 ரூபாவாக குறைந்தால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் குறைக்கப்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் வருவதால், ஒரு வாரத்திற்குள் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும் என நம்புவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
"உள்ளூர் சந்தையில் முட்டை விலை ஒரு வாரத்திற்குள் குறைய வேண்டும். முட்டை விலை குறைந்தால் பாண் விலையை தவிர்த்து பேக்கரி பொருட்களின் விலையும் குறைக்கப்படலாம்.
"பேக்கரிகள், ஹோட்டல்களில் இன்னும் ரூ.55க்கு முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. பெரும்பாலான சில்லறை கடைகளில் முட்டை இல்லை. சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுகிறது," என்றார்.
"நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பேக்கரி தொழில் ஒருபோதும் விலையை குறைக்கவில்லை என்ற கூற்றுக்கள் உள்ளன. எரிபொருள் விலை குறைப்பு பேக்கரி உற்பத்தியை பாதிக்காது. ஆனால் எரிபொருள் விலை குறைப்பிலிருந்து பேக்கரி உற்பத்திக்கான நன்மைகளை நாங்கள் வழங்குவோம் என்று நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.