குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் இலவச அரிசியை பெற்றுக் கொள்வதற்காக பாதஹேவாஹெட பிரதேச செயலகத்திற்கு வந்தவர்களில் பெண்ணொருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தலாத்துஓயா, புஸ்ஸதன்ன பிரதேசத்தில் வசித்து வந்த 68 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) பாதஹேவாஹெட பிரதேச செயலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்தவர்களின் தகாத நடத்தை காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் நீண்ட நாட்களாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், வரிசையில் காத்திருந்த போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வீழ்ச்சியடைந்தமையே அவரது மரணத்திற்கு காரணம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த பெண் அம்பியூலன்ஸ் மூலம் தலத்துஓயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உயிரிழந்தவரின் இறுதி ஆசைக்கு அமைவாக இறந்த உடலை பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒப்படைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.