(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நுகேகொடை பகுதியில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.
தேசிய தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய தேசிய வளங்களையும்,அரச நிறுவனங்களையும் விற்று பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது.
அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது.
அரச நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கினால் தேசிய மட்ட தொழிற்துறை மோசமாக பாதிக்கப்படும் நிலை தோற்றம் பெறும்.
அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்பு தோற்றம் பெறும்.
மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடும் சகலரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள்.
இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளிக்க கூடாது. நாட்டு மக்கள் சகலரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக புறக்கணித்தார்கள். ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிப்பதில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருத்தல் அரசாங்கத்தில் சுதந்திர மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் ஒன்றிணைய போவதில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைவார்கள் என்றார்.