ருமேனியாவில் புதிய தூதரகத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் சர்வதேச உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தனர்.
மேற்படி குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
ருமேனியாவில் கணிசமான இலங்கை மக்கள் வசிப்பதால், அவர்களின் குறைகளை ஆராய அங்கு இலங்கை தூதரகம் இல்லை எனவும், மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ருமேனியாவில் தூதரகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊழியர்களின் எண்ணிக்கை ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டதால், தூதரகம் அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழு உத்தரவிட்டுள்ளது.