பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் விளைவுகளை மீளாய்வு செய்வதற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த குழு, கடந்த மார்ச் 22 ஆம் திகதியன்று விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆய்வு செய்த பின்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒழித்து, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்த முயல்கிறது.
எனவே, இந்த சட்டமூலம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள் என்றவகையில், நாட்டின் அரசியலமைப்பில் உள்ள குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறைக்க அல்லது ஒடுக்க எந்த சட்டத்தையும் கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கிறது.
இந்த சட்டமூலம், சட்டமாக நிறைவேற்றப்பட்டால், தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
தாம் உட்பட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் போதிய ஆலோசனைகள் இன்றி வர்த்தமானியில் இந்த சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டது.
எனவே பரந்த அளவிலான பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பங்குதாரர்களின் கவலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் வரை சட்டமூலத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் குடிமக்களின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடும் எந்தவொரு சட்டமூலத்தையும் சவால் செய்ய தயங்கமாட்டோம் என்பதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியது.