அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி மற்றும் தாய்வான் ஜனாதிபதிக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்வானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக இணைக்கும் முனைப்பில் சீனா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் அண்மைய காலமாக இருநாடுகளுக்கும் இடையேயான போர்ப்பதற்றம் அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு நடைபெறக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும், அதனை மீறி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தாய்வான் மீதான சீனாவின் அச்சுறுத்தலை ஒப்புக்கொண்டதாகவும், தாய்வானுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.