முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விரும்புகின்றார் என தெரிவித்துள்ளார்.
உயிர்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை பொறுமையை கடைப்பிடிக்க தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் இதுவரை உறுதியான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் உலக நாடுகள் சிலவற்றில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடித்தன எனவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை வேகமாக பூர்த்தி செய்து என்னை சிறைக்கு அல்லது தூக்குமேடைக்கு அனுப்ப கர்தினால் ஆசைப்படுகின்றார் விசாரணைகள் முடிவடையாமலே இந்த குற்றத்தை செய்வதற்கு அவர் விரும்புகின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது பல முக்கிய விடயங்களிற்கு பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு விசாரணைக்கு உதவிய பல சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
2019 முதல் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்பது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.