இன்று (04) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சுக்கு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான போராட்டம் தொடர்பில் கோட்டை பொலிஸ் பி அறிக்கை விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்வதையும் இடங்களுக்குள் பிரவேசிப்பதையும், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும், அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள வசந்த சமரசிங்க, பந்துல சமன் குமார, ரவி குமுதேஷ் மற்றும் உதேனி திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையில் உரிய உத்தரவை வாசித்து ஒப்படைக்குமாறும், சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டால், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதவான் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.