வங்காள விரிகுடாவில் பங்களாதேஷின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான Hai Yang Shi You 760 ஐ இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது.
சீனாவுக்குச் சொந்தமான இந்த ஆய்வுக் கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் திகதியன்று இரவு மலாக்கா சந்தி வழியாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.
அத்துடன் ஜனவரி முதல் பங்களாதேஷில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு மே 2023 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் சீனக் கப்பல் இந்திய கடற்படையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீனக் கப்பலான “யுவான் வாங் 5” இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றபோது புதுடெல்லியால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இலங்கை, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சீனக் கப்பல்கள் இந்த பகுதியில் சட்டவிரோதமான, ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடியில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய செய்தித்தளம் கூறுகின்றது.
மேலும் சீனாவின் ஒரே வெளிநாட்டு கடற்படைத் தளம் ஜிபூட்டியில் உள்ளது.
இந்தநிலையில் தற்போதைய நிலவரப்படி, இந்தியப் பெருங்கடலில் சீனப் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியக் கடற்படை அதன் கடல் பிரசன்னத்தையும் கண்காணிப்பையும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.