பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெண்கள் உட்பட ஒரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, விமானம் திரும்பி வந்ததுடன், நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கெய்ன்ஸ் நகரிலிருந்து, அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தை நோக்கி கடந்த வியாழக்கிழமை (20) பறந்துகொண்டிருந்த விமானத்தில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மற்றொரு பயணியை தாக்குவதற்காக பயணியொருவர் போத்தலொன்றை ஏந்தியிருந்த காட்சியும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸ் பேச்சாளர் இது தொடர்பாக கூறுகையில், கெய்ன்ஸிலிருந்து வட பிராந்தியத்தின் குரூட் எய்லான்ட் நகரை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றதால் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் விமானம் திரும்பிவந்தது' எனத் தெரிவித்துள்ளார்.
விமானம் திரும்பிவந்த பின்னர் ஒரு ஆணும் பெண்ணும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
அதன்பின் விமானம் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது. எனினும், அதே குழுவினர் மீண்டும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது அவர்களுக்கிடையில் மோதல்களுக்கு வழிவகுத்தது' எனவும் அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குரூட் எய்லான்ட் நகரில் விமானம் தரையிறங்கிய பின்னர், 23 வயதான ஓர் ஆண், 23 வயதான ஒரு பெண், 22 வயதான மற்றொரு பயணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.