புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டது.
மனித உரிமைகள் பேரவையும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஏற்கனவே புதிய சட்டமூலத்தின் விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
எனினும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த யோசனை தயாரிக்கப்பட்டதாக விஜயதாஷ ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்கள், இலங்கையை காட்டிலும் கடுமையானவையாகும்.
எனவே தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் பெரிய மாற்றங்களைச் செய்யப்போவதில்லை என்றும் சிறிய மாற்றங்களே மேற்கொள்ளப்படுவதாகவும் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.