(எம்.வை.எம்.சியாம்)
பொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் நேற்று கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் மனைவியின் மூலம் கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையில் தகராறு வலுப்பெற்றுள்ளது. இதன்போது இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளாகிய மனைவி கணவனை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் விசாரணை அறிக்கைகள் சமர்பித்ததையடுத்து சந்தேகநபரான பெண் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த பெண் புலஸ்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.