யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதுவரையில் அவர்கள் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை.
சிறுவர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி குழப்பநிலை ஏற்பட்டது. சிறுவர் இல்ல விடுதி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், நிர்வாகத்துக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய விடுதியின் முகாமையாளர் சிறுவர் நீதிமன்றால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், இல்ல நிர்வாக கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரினது பெயர்கள் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவவித்தியா விருத்திச்சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு பேரில் இருவரே அன்றைய தினம் முதல் காணாமல்போயுள்ளனர்.
சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.