(எம்.எம்.சில்வெஸ்டர்)
வீதியோரமாக விழுந்துகிடந்த ஒரு இலட்சம் ரூபா பணத் தொகை அடங்கிய கை பையை (ஹேண்ட் பேக்) கண்டெடுத்த சிறுமியொருவர் உரிமையாளருக்கு ஒப்படைத்த சம்பவமொன்று அண்மையில் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனையில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், சிறிமாபுர மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்கும் குறித்த சிறுமி, அருகிலுள்ள தனது நண்பியின் வீட்டில் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியோராமாக கிடந்த கை பை (ஹேண்ட் பேக்) ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
வெற்று கை பை என நினைத்த எடுத்த அந்த சிறுமிக்கு, அந்த பணப்பை சற்று கடினமாக இருப்பதால் அதை திறந்து பார்த்தபோது, அதில் நிறைய பணத்தாள்கள் கிடப்பதை அறிந்துகொண்டாள்.
பிறருக்கு உரித்தான பொருட்களை நாம் வைத்திருப்பது தவறு என்பதை சிறு வயதிலிருந்தே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறுவதை கடைப்பிடித்து வந்த சிறுமி, குறித்த கை பையை உரிமையாளருக்கு ஒப்படைப்பதற்கு உதவுமாறு தனது நண்பியின் தாயாருக்கு கூறியுள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர், அப்பகுதி பிரதேச சபை அதிகாரிகள் முன்னிலையில் கை பை உரிமையாளரான பெண்னிடம் கையளிக்கப்பட்டது. அவசர பணத்தேவைக்காக பணத்தை கை பையில் வைத்திருந்தபோதே தனது கை பை தவறவிடப்பட்டதாக அப்பெண் தெரிவித்திருந்தார்.
சிறுமியின் நற்செயலை பாராட்டி, அப்பகுதியிலுள்ள நலன்புரிச் சங்கமொன்று குறித்து சிறுமியை கெளரவித்திருந்தது. இந்த சிறுமியின் இந்த செயல், அனைவருக்கும் முன்மாதிரியான செயலாகும் என்பதில் சந்தேகமில்லை.
பிறர் பணம் மற்றும் சொத்துக்களை அபகரித்து உல்லாசமாக வாழ்ந்து வருபவர்களுக்கு, இந்த சிறுமியின் செயல் ஒரு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.