சீனாவில் கடந்த 1927ம் ஆண்டில் தொடங்கி 1949ம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பின் பல தீவுகூட்டங்களை உள்ளடக்கிய தாய்வான் தனிநாடாக உருவெடுத்தது.
ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தாய்வான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது.
எனவே தாய்வானை தன்வசமாக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வரும் சீனா, இதற்காக படைபலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என மிரட்டி வருகின்றது.
இப்படியான சூழலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் தாய்வானுடன் அமெரிக்க நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
இந்த நிலையில் தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென், நாடு திரும்பும் வழியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு விஜயம் செய்தார்.
முன்னதாக இந்த பயணத்தின் போது தாய்வான் ஜனாதிபதியை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பை சீனா தெரிவித்தது, இந்த சந்திப்பு நடைபெற கூடாது இருதரப்பையும் கடுமையாக எச்சரித்தது.
இதனால் கடும் கோபமடைந்த சீனா, தாய்வானை சுற்றிவளைத்து போர் பயிற்சியை தொடங்கியுள்ளது.
தாய்வானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'தாய்வானை சுற்றி கூட்டு போர் தயார் நிலையிலும், தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கா மற்றும் தாய்வானில் இருந்து அதிகரித்து வரும் ஆத்திரமூட்டலுக்கு சீன இராணுவத்தின் ஒரு உறுதியான பதில் இது.
தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன இராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த திடீர் போர்ப்பயிற்சியால் இருநாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.