(எம்.எம்.சில்வெஸ்டர்)
டெஸ்ட் அரங்கில் இன்னிங்ஸ் ஒன்றில் 10 சிக்ஸர்கள் அல்லது 10 இற்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கையராகவும் உலகின் 7 ஆவது வீரர் என்ற சிறப்பை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான குசல் மெண்டிஸ் பெற்றதுடன், இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஒரு சிக்ஸர் வித்தியாசத்தில் தவறவிட்டார்.
அயர்லாந்து அணிக்கெதிராக காலியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 291 பந்துகளில் 11 சிக்ஸர்கள் 18 பெளண்டரிகள் அடங்கலாக 245 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் அரங்கில் வசீம் அக்ரம் ஸிம்பாப்வே அணிக்கெதிராக 1996 இல் பாகிஸ்தானின் ஷேக்புராவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின், பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடியிருந்தபோது, 12 சிக்ஸர்கள் விளாசியிருந்தமையே சாதனையாகவுள்ளது.
இந்நிலையில், 11 சிக்ஸர்கள் விளாசியிருந்த குசல் மெண்டிஸ் மேலும், ஒரு சிக்ஸர் அடிப்பதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், வசீம் அக்ரமின் 27 வருட கால சாதனையை முறியடிப்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டார். எனினும், டெஸ்ட் அரங்கில் 10 அல்லது 10 இற்கு மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய முதலாவது இலங்கையராகவும் உலகின் 7 ஆவது வீரராகவும் பதிவானார். இன்னிங்ஸ் ஒன்றில் 8 சந்தர்ப்பங்களில் 11 சிக்ஸர்கள் அடிகக்கப்பட்டுள்ளதுடன், இதில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிரெண்டன் மெக்கலம் 2 தடவைகள் 11 சிக்ஸர்கள் விளாசியுள்ளமை கவனிக்கத்தக்கது.
டெஸ்ட் அரங்கில் இன்னிங்ஸ் ஒன்றில் 10 அல்லது 10 இற்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் சந்தர்ப்பங்கள் மற்றும் அடித்த வீரர்கள் விபரம்.