எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைளை தடுப்பதற்காக 250 மில்லியன் டொலரை இலஞ்சமாக சாமர குணசேகர என்பவரே பெற்றுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஆனால், சாட்சியம் கிடைக்கவில்லை.எனவே பொலிஸார்தான் உண்மையை கண்டுப்பிடிக்க வேண்டும் என்றார்.
அத்துடன் எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கான .நஷ்டஈடு தொடர்பான வழக்கு தோல்வியடைந்தால் அதன் பொறுப்பை சுற்றாடல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவே ஏற்க வேண்டும் எனவும் அவர் குற்றம்சாட்டினார்
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கும்,கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கான நஷ்டஈடு தொடர்பில் துறைசார் நிபுணர்கள் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாதிரிகளுக்கு அமைய கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு 6.4 பில்லியன் டொலர் நஷ்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.