Our Feeds


Wednesday, April 26, 2023

ShortNews Admin

06 முஸ்லிம் அமைப்புகளின் தடையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் விடுக்க ஜனாதிபதி தயார் : ஹரீஸ் MP



பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.


இன்று (26) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தானும், அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மானும் சந்தித்து குறித்த 6 அமைப்புகளின் தடைநீக்கம் குறித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு உறுத்தியளித்ததாக அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


அவ்வமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடியுள்ள விடயங்களை பற்றி விளக்கி இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்த நாங்கள் இவ்விடயத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தோம்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பில் இதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டதுடன் தடை செய்யப்பட்டவற்றில் 6 அமைப்புகள் எவ்வித பயங்கரவாத சம்பவங்களுடனோ பயங்கரவாத அமைப்புகளுடனோ தொடர்பைக் கொண்டிருக்கவில்லை எனவே, இவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென நானும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.


எமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இதனடிப்படையில் தடை செய்யப்பட்ட குறித்த 6 அமைப்புகளின் முக்கியஸ்தர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தனித்தனியே கலந்துரையாடியுள்ளனர்.


மேலும், குறித்த 6 முஸ்லிம் அமைப்புகளிடமிருந்தும் பாதுகாப்பு அமைச்சினால் சில ஆவணங்கள் கோரப்பட்டு அந்த ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 6 அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.


மாளிகைக்காடு நிருபர் 

நன்றி: தமிழன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »