(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்கள் மற்றும் குர்ஆன் பிரதிகளை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு கையாளப்படும் கடுமையான விதிமுறைகள் அரசியலமைப்பின் 10,12,14 ஆம் பிரிவுகளை மீறுவதாகும்.
இஸ்லாமிய நூல்கள் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு மாத்திரம் ஏன் இந்த விதிமுறைகள்? மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவிடயத்தில் தலையிட்டு நியாயமான தீர்வு பெற்றுத்தரவேண்டும் என வை.எம்.எம்.ஏ. பேரவையின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் கே.என்.டீன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கே.என்.டீன் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். இஸ்லாமிய நூல்கள்,குர்ஆன் பிரதிகள் இறக்குமதி செய்யப்படும்போது கையாளப்படும் கடுமையான விதிமுறைகள் தொடர்பில் வை.எம்.எம்.ஏ.கடந்த வருடம் ஜூன் மாதம் செய்திருந்த முறைப்பாட்டினை விசாரணை செய்வதற்காகவே அங்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் கே.என்.டீன் விடிவெள்ளிக்கு கருத்துத் தெரிவிக்கையில், எமது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்கள், குர்ஆன் பிரதிகளை சுங்கத்திலிருந்தும் விடுவிப்பதற்கு இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. ஏனைய மத நூல்களுக்கு இவ்விதிமுறை பின்பற்றப்படுவதில்லை.
இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்கள் மற்றும் குர்ஆன் ஒவ்வொன்றும் இரு பிரதிகள் புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படவேண்டும். அப் புத்தகங்களில் குர்ஆனில் அடிப்படைவாத கருத்துகள், வசனங்கள் இருக்கின்றனவா என ஆராய அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் வழங்கப்படும். பின்பு அவை செயலாளரினால் பாதுகாப்பு அமைச்சுக்கு அ-னுப்பி வைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கினால் மீண்டும் அந்நூலின் பிரதிகள் குர்ஆன் பிரதிகள் புத்தசாசன அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்பே அவை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படும். இவ்வாறான விதிமுறை காரணமாக இந்நூல்களை, குர்ஆனை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள் பல்வேறு சிரமங்களையும் காலதாமதத்தையும் எதிர்கொள்கின்றனர்.
முஸ்லிம்களின் நூல்களுக்கும் குர்ஆனுக்கும் மாத்திரம் ஏன் இந்த விதிமுறை. எனவே புத்தசாசன அமைச்சின் செயலாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வெளியிட்டுள்ள இது தொடர்பான சுற்று நிருபத்தை ரத்துச் செய்ய வேண்டும் என அவர் மனித உரிமை ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் முறைப்பாட்டாளரான வை.எம்.எம்.ஏ யின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் கே.என்.டீன் ஆகியோரை விரைவில் அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் தெரிவித்தார்.- Vidivelli