பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்ற மாணவி ஒருவர் சுயநினைவற்ற நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ரிதிகம பிரதேசத்தை சேர்ந்த அபேவர்தன முதலிகே தொன் வித்யானி மதுமாலிகா டி சில்வா என்ற 26 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.
இவர் குருநாகல் மலியதேவ மகளிர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவியாவார்.
இவர் சில காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மயக்கமடைந்த மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சுயநினைவு திரும்பிய போது மன அழுத்தத்திற்காக கொடுக்கப்பட்ட மருந்தை அதிகளவில் உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
குறித்த மருந்தை தற்செயலாக அளவுக்கதிகமாக உட்கொண்டதாலா அல்லது தற்கொலைக்காக வேண்டுமென்றே மருந்தை உட்கொண்டதாலா என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித விஜேகோனின் மேற்பார்வையில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.