Our Feeds


Thursday, March 30, 2023

Anonymous

இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் - U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும் உரிமையை இந்தோனேஷியா இழந்தது

 



20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது இந்தோனேஷியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இருபது வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை எதிர்வரும் மே, ஜூன் மாதங்களில் இந்தோனேஷியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இச்சுற்றுப்போட்டிக்கு இஸ்ரேலும் முதல் தடவையாக தகுதி பெற்றுள்ளது. இப்போட்டிகளுக்காக அணிகளைக் குழுநிலைப்படுத்தும் குலுக்கல் நிகழ்வு இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெறவிருந்தது.

ஆனால், இப்போட்டிகளிலிருந்து இஸ்ரேலை வெளியேற்ற வேண்டும் என பாலி மாகாண ஆளுநர் வயான் கோஸ்ட்டர் வலியுறுத்தினார். இதையடுத்து இக்குலுக்கள் நிகழ்வை ஒத்திவைப்பதாக பீபா கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தர்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷிடவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.

உலகில் மிக அதிக எண்ணிக்கையான முஸ்லிம்களைக் கொண்டுள்ள இந்தோனேஷியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் எதுவும் இல்லை. பலஸ்தீன விவகாரமே இதற்குக் காரணம்.

ஆனால், பலஸ்தீனியர்கள் தொடர்பான இஸ்ரேலின் கொள்கைகள் காரணமாக இஸ்ரேல் இப்போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்க வேண்டும் என இந்தோனேஷிய விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பாலி ஆளுநர் கடிதம் எழுதியமையே இதற்கான காரணமாக இருக்கலாம் என இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமையை 2019 ஆம் ஆண்டு இந்தோனேஷியா பெற்றது.  அதன் பின்னரே இச்சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழ்நிலைகளக் கருத்திற்கொண்டு, இச்சுற்றுப்போட்டிக்கான வரவேற்பு நாடு என்பதிலிருந்து இந்தோனேஷியாவை நீக்குவதற்கு பீபா தீர்மானித்துள்ளது என பீபாவின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரவேற்பு நாடு எது என்பது இயன்றவரை விரைவில் அறிவிக்கப்படும் என பீபா தெரிவித்துள்ளது.

போட்டிக்கான திகதிகள் மாறாமல் இருக்கும் என பீபா தெரிவித்துள்ளது. இந்தோனேஷிய கால்பந்தாட்டச் சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு நாடாக இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் தகுதியையும் இந்தோனேஷியா இழந்துள்ளது.

இதேவேளை, அரசியலையும் விளையாட்டையும் வேறுபடுத்த வேண்டும் என இந்தோனேஷிய கால்பந்தாட்டச் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் ஆர்யா சினுலிங்கா கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »