புதிய பெயர்களில் மேலும் கொடூரமான சட்டங்களை இயற்றுவதை விடுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் வேண்டுகோள்விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை தடுப்பதற்கான சமவாயம் போன்ற பல புதிய சட்டங்களும் சக்திவாய்ந்த புலனாய்வு வழிமுறைகளும் ஏற்கனவே அமுலில் உள்ள நிலையில், புதிய பெயர்களில் மேலும் கொடூரமான சட்டங்களை இயற்ற முயற்சிப்பதாக நாம் அறிகிறோம்.
இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் பிற சட்டப் பாதுகாப்புகளை மீறுவதானது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. எனினும் பெரும்பாலான பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கவில்லை.
பிரபல்யம் வாய்ந்த வழக்குகளைத் தவிர, ஏனைய வழக்குகளில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழுக்கள் தவறிவிட்டன. வழக்குச் செலவுகளை விட முறைப்பாடளிப்பதற்குப் பயந்து எவ்வாறு மக்கள் அமைதியாகிவிடுகின்றனர் என்பதை ஓர் ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
2018 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற முயன்ற போதிலும் பலத்த எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது. எனினும் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தையும் விட மிகவும் மோசமான சட்டங்களை கொண்டு வருவதற்கான நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு அனுமதிக்க முடியாது. எனவேதான் மேலும் புதிய சட்டங்களை இயற்றுவதை விடுத்து, தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கின்ற நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.- Vidivelli