மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன் மயிலந்தனை மாதந்தனை மேச்சல் தரை பகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) விஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டறிந்த பின்னர் கட்சி தலைவர் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைப் பிரதேசமான மயிலந்தனைமடு பெரிய மாதந்தனை பிரதேசத்தில் மேச்சல்தரை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களை அச்சுறுத்தி மாடுகளை வெட்டி அவர்களை பரம்பரையான மேச்சல்தரையில் இருந்து ஓடவைப்பதற்காக முழுமூச்சிலான திட்டம் கடந்த இரண்டு வாரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பண்னையாளர்களின் இந்த பிரச்சனைகளை அவர்கள் பல இடங்களில் முறையிட்டனர். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அவர்களுக்கு முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாகின்ற நிலை ஏற்பட்டுள்ளது
மாதுறு ஓயா வலதுகரையை சிங்களமயமாக்குதலுக்கான நோக்கத்தோடு இந்த பண்ணையாளருக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது நன்றாக விளங்குகின்றது.
இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர், வனவளதிணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை போன்ற அனைத்து கட்டமைப்புக்களும் இங்குள்ள மேச்சல்தரை காணிகளை அபகிப்பதற்கான நடவடிக்கையை உறுதியாக இருக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவு இருக்கின்றது இந்த பிரதேசத்தில் தமிழ் விரோத நடவடிக்கை சிங்கள விரோதிகளால் முன்னெடுப்பதை தடுக்க ஒருவருடத்துக்கு மேலாக இருக்கின்றது கிழக்கு மாகாண ஆளுநருடைய முழு ஒத்துழைப்புடன் கண்ணுக்கு முன்னால் அவருடைய வழிகாட்டலில் நடக்கின்றது என்றால் எந்தளவுக்கு இந்த இனவாத சட்டத்தையும் நீதியையும் மதிக்கின்றார்கள் ?
எனவே தமிழ் பிரதேசத்தை இன சுத்திகரிப்பு நடாத்துவதற்கும் சிங்கள குடியேற்றத்தை நடாத்தி இங்குள்ள மக்களை பட்டினியில் சாவடிக்கின்ற நடவடிக்கையான மாதுறு ஓயா அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்களே நீங்களும் தமிழ் இன சுத்திகரிப்பிற்கு உடந்தையாக இருக்கின்றீர்கள்.
எனவே உங்களுக்கு இருக்கின்ற நிதியை எந்தவிதமான நிபந்தனையும் போடாமல் சிங்கள இனவாத சித்தாந்தத்திற்கு விலைபோகின்றதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது என தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் நாங்கள் போராட்டங்களை செய்வதை தவிர வேறு வழியில்லை.
கோட்டாபாய ராஜபக்ஷ காலத்தில் சந்தித்து இந்த விடையங்களை கூறி பாராளுமன்றத்தில் பெரிதுபடுத்தி பேசிய போது தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவாதம் தந்தாலும் கூட இன்று முன்னரைவிட தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக நீங்கள் கருதி காப்பாற்றுகின்ற வேளையில் அவரின் ஆட்சி காலத்தில் இந்த இனவாத தமிழ்விரோத செயற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது இன்று யதார்த்தம்.
எனவே நிதி உதவி செய்யும் சர்வதேச நிறுவனங்கள் உடனடியாக கொடுக்க கூடிய நிதி உதவிகளை நிபந்தனைகளை போட்டு இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகின்றதை செய்யவேண்டும்.
இந்த திட்டம் மக்களுக்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருக்கவேண்டுமே தவிர இந்த மக்களை அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்து ஒரு இனழிப்பிற்கு வழிவகைக்கின்ற முறையில் அமையகூடாது இதையும் அம்பலப்படுத்துவோம் எனவே இந்த விடையங்களை கருத்தில் கொண்டு சரியான வகையில் இங்கே பரம்பரையாக இருக்ககூடிய தமிழர் தாயகத்தில் இருக்ககூடிய உண்மையான சொந்தகாரர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும்.
அதேவேளை எங்களுடைய உள்ளூராட்சி சபைகள் தவிசாளர் பதவிகளை வைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரங்களை வைத்துக் கொள்பவர்கள் இந்த சொந்த மக்களுக்கு இந்த நிலத்துக்குரிய உரிமையாளர்களுக்கு வந்து தொழிலை செய்வதற்கான போக்குவரத்துக்கு இந்த பாதைகளை சீர் செய்ய முடியாமல் இவ்வளவு காலமும் பாத்துக் கொண்டிருப்பது என்பது மிக மோசமான ஒரு அநியாயம்.
இந்த மக்கள் தங்களுக்கு பல அச்சுறுத்தல் மத்தியில் இந்த பிரதேசத்தில் தங்களுடைய உயிர்களை வைத்துக் கொண்டு பண்ணைகளை பராமரிப்பதென்பது ஒரு இலகுவான விடையமல்ல.
ஒருபக்கம் சிங்கள இனவாத அச்சுறுத்தல், இன்னொரு பக்கம் யானையால் அச்சுறுத்தல். இந்த மக்களுக்கு தேவைப்படுகின்ற உத்தரவாதங்களையும் உதவிகளையும் வசதிகளையும் செய்யாமல் தமிழ் பிரதேச சபைகள் இயங்குவது என்பது மன்னிக்க முடியாத ஒரு செயலாகும் என்றார்.