Our Feeds


Thursday, March 23, 2023

ShortNews Admin

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி “மாயஜால வெள்ளி தோட்டா“ அல்ல - உதயகுமார் MP காட்டம்.



நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கையாளப்பட்டது போன்றே  சர்வதேச நாணய நிதியத்தின் விடயமும் கையாளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பரவ ஆரம்பித்தபோது எதிர்க்கட்சி தலைவர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி எழுப்பினர் - எச்சரிக்கை விடுத்தனர் அந்த நேரத்தில், இந்த அரசாங்கம்  இறுமாப்போடு செயல்பட்டு எமது கோரிக்கையை கணக்கில் எடுக்கவில்லை - எச்சரிக்கையை செவி  மடுக்கவில்லை - மாறாக கேலி செய்தது. 


கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பல உயிர்கள் பலியான பின்னரே  அரசாங்கம்அதிலிருந்து மீண்டு வருவதற்கான வேலை திட்டத்தை  செயல்படுத்தியது.


அதுபோலவே, நாடு கடன் சுமையில் சிக்கி பொருளாதார பிரச்சனையில தவித்துக்கொண்டிருந்தபோது - சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு  எதிர்க்கட்சிகள் - அரசாங்கத்திற்கு  பல்வேறு அழுத்தங்களை கொடுத்த போதும் அவர்கள் அதனை செய்யாது நாடு  அதல பாதாளத்தில் விழும் வரை  பார்த்துக்கொண்டிருந்தனர். 


தற்போதய ஜனாதிபதி இம்முறை பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முன்பே நாங்கள் சர்வதேச நாணய  நிதியத்திடம் செல்ல வேண்டும் என  நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

ஆனாலும், முன்னால் ஜனாதிபதி தனது இறுதிக்கட்ட பதவி நேரத்தில் தான்  சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரி சென்றார்.                                

அதனால், நாட்டிற்கு நடக்க வேண்டிய அனைத்து கெடுதல்களும் நடந்த பின்னர் தற்போதுதான் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்திருக்கிறது. அத்துடன், இந்த உதவி என்பது ‘கடன்   பெற்ற ஒருவரை - அந்த கடனிலிருந்து  காப்பாற்றுவதற்காக வழங்கப்படும் மேலும் ஒரு கடனாகும்.”


அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது “நிதி அன்பளிப்பு  கிடையாது”” என்பதே நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒரு தற்காலிக ஆறுதலே தவிர முழுமையான  வெற்றியோ தீர்வோ அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின பிணையெடுப்பு இலங்கைக்கு மாயஜால வெள்ளித்தோட்டா அல்ல என மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பலத்தரப்பு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும் “இலங்கைக்கு கடினமான பாதை உள்ளது” என தெரிவித்துள்ளது.


ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைக்கப்பெற்ற விடயத்தை ஏதோ சாதனை படைத்து - ஆஸ்கார் விருது கிடைத்தது போல குதூகளிக்க வேண்டாம் என இந்த அரசாங்கத்திடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். 


கடன் வாங்கியதற்காக கொண்டாடாமல் கடனை செலுத்தி விட்டு  கொண்டாடுவோம். எனெனில், இந்த உதவி நமக்கு  ஒரு பரிட்சை அல்லது போட்டியில் பங்குப்பற்ற ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே இதில் வெற்றிப்பெற வேண்டியதே நமது நோக்கம் மற்றும் இலக்காக இருக்க  வேண்டும் ஆகவே, இந்த கடினமான பாதையை கடக்க, பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நாட்டை கட்டியெழுப்ப முழு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்


அதேநேரம், நாடு இந்த நிலைக்கு செல்வதற்கு மிக முக்கியமான காரணம் நீங்கள் தான் - இந்த அரசாங்கம் தான்  என்பதை மறந்து விடாதீர்கள். மேலும், கடந்தகால ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்க்கொள்ளப்பட்ட கொள்ளை மற்றும் சீனி மாஃபியா, எரிபொருள் மாஃபியா, எண்ணெய் மாபியா, பருப்பு மாபியா, ஆன்ட்டிசஜன் மாஃபியா,உர மாஃபியா போன்ற பல்வேறு மாஃபியாக்கள் மூலம் நாட்டு மக்களின் பணத்தை கோடி கணக்கில் கொள்ளையடித்ததன் காரணமாகவே - நாடு கடன் சுமைக்கு சென்றது என்பதை நாட்டு மக்கள் மறப்பதற்கு தயாரில்லை.


இப்போது நீங்கள், என்னதான் சாமர்த்தியமாக அச்சம் கொண்டு தேர்தலை பின்போட்டாலும் தேர்தல் எப்போது நடந்தாலும் - நாட்டு மக்கள் உங்களுக்கு ஒரு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பதே உண்மை. 


சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்தொகை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இணங்கிய அனைத்து விடயங்களையும் நாட்டு மக்களுக்கு மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். 


அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது இந்த நிபந்தனைகளில் பிரதானமான ஒன்றாக காணப்படுவதாக தகவல் உள்ளது. அதன் உண்மை தன்மை குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். 


மேலும் வரிகள் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் உண்மை தன்மை குறித்தும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.


இந்த கடன் பெறுதல் மூலம் நாட்டு மக்களின் சுமைகள் மேலும் அதிகரிக்கப்படுகிறதா ? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.


முறையற்ற நிர்வாகம் காரணமாக நாடு கடன் குழியில் விழுந்தது. அதற்கு நாட்டு மக்கள் பொறுப்பு கிடையாது. அதனால் பொறுப்பு கூற தேவையற்ற நாட்டு மக்கள் மீது சுமையை சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


நாடு இந்த அளவு படுகுழியில் விழுவதற்கு காரணம் ஊழல் நிறைந்த மோசடி நிறைந்த ஆட்சியாளர்கள். எனவே அந்த ஆட்சியாளர்களிடமிருந்து இந்த பணத்தை வசூலிக்க வேண்டுமே தவிர அப்பாவி மக்களிடம் இருந்து அல்ல என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.


மேலும், இன்று நாட்டு மக்களுடைய அத்தியாவசிய தேவைகள் அதிகரித்துள்ளன. இன்னும் நாட்டிலே ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவு தேவைக்காக காத்திருப்பதாகவும் அவர்களிடம் சத்துணவு இல்லை எனவும் ஐ.நா வின் அறிக்கை கூறுகிறது.


ஆகையால், மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான தேவைகளில் உணவு பிரதானமான ஒன்றாக காணப்படுகிறது. அதனால், நாட்டு மக்களை உயிர் வாழ வைப்பதற்காக உடனடியாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்த மாதம் தமிழ் சிங்கள புது வருடம் பிறக்கிறது. மக்களின் வருமானம் குறைந்து விட்டது. கிடைக்கின்ற வருமானத்தை வைத்து வாங்கிய கடன்களை செலுத்துவதா? அல்லது தங்களுடைய பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக அதனை செலவு செய்வதா ? என்ற திண்டாட்ட நிலையில் மக்கள் உள்ளனர். 


இந்த மக்களினுடைய இந்த அவல நிலைக்கு காரணமான அரசாங்கம் இதனை உணர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும். குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின. உதவி கிடைத்து விட்டதாகவும் நாடு வழமைக்கு திரும்பி விட்டதாகவும் அரசாங்கம் மார்த்தட்டும் நிலையில் டொலரின் விலை குறைந்து ரூபாவின் பெருமதி அதிகரித்துள்ளது  மற்றும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவு குறைந்துள்ள நிலையில் எரிப்பொருளின் விலை குறைக்கப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை குறையும்.


புது வருடத்தை முன்னிட்டு ஆகவே, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அத்துடன் அரசு ஊழியர்களுக்கு நிவாரணத் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »