Our Feeds


Friday, March 10, 2023

ShortNews Admin

ஜனாதிபதிக்கு பித்து பிடித்துள்ளது கருதி அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டும் - வாசுதேவ நாணயக்கார MP





(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை  ஹஷான்)


சர்வதேச நாணய நிதியம் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக உள்ளது. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்தி விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், அவ்வாறாயின் ஜனாதிபதிக்கு பித்து பிடித்துள்ளது கருதி அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் வெற்றி பெற்றுள்ளோம்,பொருளாதார பாதிப்புக்கு ஒப்பீட்டளவில் தீர்வு எட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார் ஆனால் நடைமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஒற்றை அல்லது இரட்டை இலக்கத்தில் குறைத்து மின்சார கட்டணத்தையும் எரிபொருளின் விலையையும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்த நிலையிலும் அதன் பயனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் நாட்டு மக்கள் உள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதையும்,அதனை தொடர்ந்து சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதையும் இலக்காக கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார். பொருளாதார மீட்சிக்கு கடன் பெறுவது குறுகிய கால தீர்வு வழங்கினாலும்,மறுபுறம் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் .

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள முடியும் என குறிப்பிடும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நாணய நிதியத்தின் கடும் நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு குறிப்பிடாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக காணப்படுகிறது.நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட நாடுகள் இன்றும் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலை காணப்படுகிறது.

அரசாங்கத்தின் தீர்மானங்கள் சரியா,பிழையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை தேர்தல் ஊடாகவே வெளிப்படுத்துவார்கள். ஆகவே மக்களின் அபிசாலைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய தடையாக செயற்படுகிறார்.தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது நாட்டில் தேர்தல் இல்லை என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என ஜனாதிபதி உட்பட அரசாங்கம் குறிப்பிடுகிறது, ஆனால் தேர்தலுக்கு திரைமறைவில் இருந்து தேர்தலுக்கு தடையாக செயற்படுகிறது. ஆகவே முதலில் மக்களாணைக்கு மதிப்பளித்து செயல்படுங்கள், வெற்றி, தோல்வி என்பது நிலையற்றது.

பாராளுமன்றத்திற்கு நிதி அதிகாரம் உண்டு,ஆகவே  நிதி விடுவிப்பு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் ஏதும் குறிப்பிட முடியாது என ஆளும் தரப்பின் உறுப்பினர் சிறப்புரிமை மீறல் பிரேரணையை முன்வைத்துள்ளமை தவறானது. அனைத்து தரப்பினரது நிலைப்பாட்டை ஆராய்ந்தே உயர்நீதிமன்றம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் சிறந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி விடுவிப்புக்கான தடைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் என முன்வைக்கப்பட்டுள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணையை  பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான குழுவிற்கு சபாநாயகர் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கவில்லை. சபாநாயகர் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமை உள்ளதை போன்று நாட்டு மக்களுக்கும் வாக்குரிமை என்ற சிறப்புரிமை உள்ளது. ஆகவே நாட்டு மக்களின் சிறப்புரிமையை தடை செய்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.நாட்டில் சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்துவது ஜனாதிபதியின் பொறுப்பு ,

நாட்டு மக்களின் எதிராக சர்வதேச நாணய நிதியம் காணப்படுகிறது. மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார் கள் இவ்வாறான பின்னணியில் பொருளாதாரத்தை மேம்படுத்தி விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், அவ்வாறாயின் அவருக்கு பித்து (பைத்தியம்) பிடித்துள்ளது என கருதி  ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »