கட்சி என்ற ரீதியில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். எனினும் சேறு பூசும் செயற்பாடுகளுக்கு நாம் எதிரானவர்களென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிரூபிக்க முடியாதவற்றை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதற்கு எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனரென குறிப்பிட்டுள்ள அவர், கிராமப்புற மக்கள் எப்போதுமே எம்முடனுள்ளனர் என்றும் எதிர்வரும் தேர்தலிலும் அனைத்து மக்களும் பொதுஜன பெரமுன வின் வெற்றியை உறுதி செய்வரென்றும் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும்போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அவர்,
எமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அபிவிருத்திகள் இடம்பெற்றன. நெடுஞ்சாலைகள் மட்டுமன்றி கிராமிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு காபர்ட் போடப்பட்டன. அப்போது எதிர்க்கட்சிகள் காபர்ட் வீதியை சாப்பிடுவதா? என கேட்டார்கள். எனினும் தற்போது கிராமிய மக்கள் அவர்களின் விவசாய உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கு அந்த வீதிகள் பெரும் உபயோகமாக காணப்படுகின்றன.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மொனராகலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் காணப்படவில்லை. எனினும் அந்த மாவட்டத்திற்கு 96 வீதமான மின்சாரத்தை எமது காலத்திலேயே நாம் வழங்கினோம்.
கிராமிய பாடசாலைகளுக்கான வசதிகளையும் மனித வளங்களையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம் மொனராகலை வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தி அனைத்து வசதிகளையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். முதல் தடவையாக மொனராகலை மாவட்டத்திற்கு நீச்சல் தடாகத்தையும் நாமே பெற்றுக் கொடுத்தோம்.
தற்போது கிராமிய மட்ட விவசாயத் துறையில் சற்று பின்னடைவு காணப்படுகிறது. அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. படிப்படியாக விவசாய நடவடிக்கைகளுக்கு நிவாரணங்களை வழங்கி விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
மக்கள் விடுதலை முன்னணியினர் கிராமம் கிராமமாக சென்று நாட்டைக் கட்டி எழுப்புவோம் என தெரிவித்து வருகின்றனர். எனினும் 1971, 88 மற்றும் 89 காலங்களில் நாட்டின் வளங்களை அழித்தது அவர்களே. அவ்வாறான கட்சிக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு மக்கள் மடையர்கள் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.