(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 25ம் திகதி உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறுமா அல்லது அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய தேர்தல் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே வாக்குரிமையை பாதுகாக்க சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பொல்காவெல பகுதியில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.அனைத்த முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னணியில் அவர் தற்போது பாராளுமன்ற சிறப்புரிமையை குறிப்பிட்டுக் கொண்டு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் ஊடாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தடையேற்படுத்த தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும 28 ஆம் திகதி தபால்மூல வாக்கெடுப்பை நடத்தவும்,எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது,ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா என்பது சந்தேகத்ததுக்குரியதாக உள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
அவ்வாறாயின் தற்போது அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது மாத்திரம் பொருளாதாரம் பாதிக்கப்படாதா தேர்தலை நடத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஆளும் தரப்பினர்கள் உள்ளார்கள்,தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் உள்ளன.
தனிநபர் ஒருவர் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை தீர்மானிக்கும் போது ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படும். நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம்,அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைளை கடந்த 9 ஆம் திகதி ஆரம்பித்துள்ளோம் என்றார்.