Our Feeds


Friday, March 31, 2023

Anonymous

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடியினை மூடி மறைக்க முயற்சி!

 



றிப்தி அலி


கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற சுமார் இரண்டு கோடி ரூபா நிதி மோசடியினை மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிய வருகின்றது.


இந்த நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இறுதி  அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிதி மோசடி தொடர்பில் கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீத் மற்றும் கிழக்கு மாகாண திறைசேரியின் பிரதம கணக்காளர் எம். கலைஞானசுந்தரம் ஆகியோர் தலைமையிலான இரு குழுக்களினதும் அறிக்கைகள் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டு பல வாரங்கள் கடந்துள்ள நிலையில், கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் இதுவரை காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விபரம், அவர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் நிதி மோசடித் தொகை போன்ற பல விடயங்கள் குறித்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குற்றவாளிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருந்த போதிலும், குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்த இதுவரை கிழக்கு மாகாண சபையினால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக, கல்முனை மாநகர சபையில் கடமையாற்றிய கீழ் நிலை உத்தியோகத்தர்கள் இருவர் மாத்திரம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற உயர் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்களை மாகாண பிரதம செயலாளரினால் மூடி மறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது போன்றே, கல்முனை மாநகர சபையில் இடம்பெறுகின்ற நிதி மோசடியினையும் மூடி மறைக்க கிழக்கு மாகாண பிரதம செயலாளர் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்கவினை தொடர்புகொண்டு வினவிய போது,

"விசாரணைக் குழுக்களின் இறுதி அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில், கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீதினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக கிழக்கு மாகாண முதலைமைச்சின் பதில் செயலாளரிடம் கையளித்துள்ளேன்.

அது போன்று கிழக்கு மாகாண திறைசேரியின் பிரதம கணக்காளர் எம். கலைஞானசுந்தரத்தினால் தமிழில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையினை மொழிபெயர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன. மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அறிக்கை கிடைத்தவுடன் அதிலுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

எவ்வாறாயினும், "கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீதினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை மாத்திரம் வைத்து எதனையும் மேற்கொள்ள முடியாது" என கிழக்கு மாகாண முதலைமைச்சின் பதில் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா தெரிவித்தார்.

இந்த நிதி மோசடி தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பின்னரே நடவடிக்கைகள் எடுக்க முடியும். இதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது தொடர்பில் தற்போது கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (31) வெள்ளிக்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

இதன்போது தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையின் முன்னாள் உத்தியோகத்தர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »