நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக, நேபாள காங்கிரஸ் கட்சியின் ராம் சந்திர பௌடேல் பதவியேற்றார்.
நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ராம் சந்திர பௌடேல் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
நேபாளத்தின் தற்போதைய ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
அவருக்கு பதிலாக அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக விளங்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, சாதாரண பின்புலத்தைக் கொண்ட ராம் சந்திர பௌடேல் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் தலைமையிலான சிபிஎன் (யுஎம்எல்) கட்சி சாா்பில் சுபாஷ் சந்திர நெம்பாங் போட்டியிட்டாா்.
332 நாடாளுமன்ற உறுப்பினா்களும், 550 மாகாணப் பேரவைகளின் உறுப்பினா்களும் இதில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ள நிலையில், 313 எம்.பி.க்கள் மற்றும் 518 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா்.
இதில், 64.13 சதவீத வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேபாள ஜனாதிபதி மாளிகையில் 3ஆவது ஜனாதிபதியாக சந்திர பௌடேல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.