ஜா-எல நகர மத்தியில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டதில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட எம்.பி.5 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோதல் ஒன்றின் போது காயமடைந்தவர்கள் இருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது குறித்த வேன் ஜா-எல நகர மத்தியில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.
அப்போது, ஜா-எல காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் சென்று வெட்டுக் காயங்களுடன் வாகனத்தில் இருந்த இருவரை நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அந்த மகிழூந்தை காவல்துறையினர் சோதனை செய்த போது தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை கண்டுபிடித்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் ராகம பிரதேசத்தில் சிலர் மது அருந்திவிட்டு கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதிக்கு சென்று அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் ராகம பகுதிக்கு சென்று உரிய துப்பாக்கியை எடுத்துச் சென்று மோதலில் ஈடுபட்ட இரவு கேளிக்கை விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்த முற்பட்ட போது அவர்கள் போத்தல்களால் தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த நிலையில் திரும்பிச் சென்ற நபர்கள் பயணித்த மகிழூந்து விபத்துக்குள்ளானது.
எவ்வாறாயினும், துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினரின் விசாரணையில், அந்த துப்பாக்கி பாகிஸ்தானிலிருந்து ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவருக்கு பரிசாக வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெல்லம்பிட்டிய - கொட்டுவில பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் மூவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சம்பவத்திற்கு திட்டமிட்டு ஆதரவளித்த இருவர் கொட்டுவில பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது கிடைத்த தகவலின் படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வந்த உந்துருளி ஓட்டுனர் மேல் போமிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் 28, 30 மற்றும் 34 வயது மதிக்கத்தக்க கொட்டுவில, நவகமுவ, போமிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.