Our Feeds


Saturday, March 25, 2023

SHAHNI RAMEES

வடகொரியா கடலுக்கு அடியில் புதிய அணு ஆயுத பரிசோதனை - தென்கொரியா கடும் கண்டனம்

 




வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே

தீராப்பகை நிலவுகின்றது. வடகொரியா தனது அணு ஆயுதங்களால் தென்கொரியாவை அச்சுறுத்தி வருகின்றது. 


இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தென்கொரியாவுக்கு அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றது. 


அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் பிரமாண்ட கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. 


இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் தற்போது வடகொரியா கடலுக்கு அடியில் புதிய அணு ஆயுதத்தை சோதித்து அதிரவைத்துள்ளது.


நாட்டின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அந்த நாட்டின் அரசாங்கம் ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலுக்கு அடியில் செலுத்தப்பட்ட ஆயுதம் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் சுமார் 60 மணி நேரம் பயணம் செய்து பின்னர் வெடித்து சிதறியது. 


இதன் மூலம் செயற்கை சுனாமியை ஏற்படுத்தினோம். தலைவர் கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் இந்த சோதனை நடந்தது. சோதனை வெற்றிகரமாக அமைந்தது அவர் மகிழ்ச்சி அடைந்தார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே வடகொரியாவின் இந்த சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


அந்த நாட்டின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவிக்கையில்,

வட கொரியாவின் இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயலுக்கு அது நிச்சயமாக உரிய விலையை கொடுக்க நேரிடும்' என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »